உயிர் நண்பன் ஸாலிஹீனுக்காக....
சாமான்ய நண்பன் தனையும்
சாதனையாளனாய் மாற்றி மகிழும்
சாகஸ வித்தைக் காரன்
ஸாலிகீன் எந்தன் சோதரனே...!
கல்லூரி வாழ்வினில் கழிந்த
கலகலத்த தருணங்களை எண்ணி
கவலையுடன் நினைவு கூர்ந்து
கண்ணிமை நனைய வரைகின்றேன்...!
ஈரொம்பது வருஷ காலம்
இவ்வுலகில் நீ வாழ்ந்த காலம்
ஈசானி மூலை எங்கும்
இவன்பெயர் தலைத்து ஓங்கும்...!
அன்புக்கு அதிபதியே
அருமையான மானுடனே
அனைவரையும் கவர்ந்திழுத்த
அதிரடி எழுத்தாளனே...!
உன் புகழ்பாடி கவிவடிக்க
உலகில் சொற்களில்லை நான்பிடிக்க
வார்த்தைகள் அற்ற மகத்துவனாய்
வாழ்ந்து மடிந்தாய் வரலாற்றிலினிதாய்...!
கவிவடிக்க கற்றுக் கொடுத்த
கவிஞன் எந்தன் ஆசானே
கவிதை உனக்கும் வடிப்பேனென
கனவிலும் நான் நினையேனே...!
ஆற்றல் பலகொண்ட உன்னை
அவசரமாய் காணவே எண்ணி
ஆண்டவனும் நாட்டம் கொண்டே
அதிவேகமாய் அழைத்தான் போலும்...!
நண்பர்கள் நாங்கள் இன்று
நாதி இன்றி தவிக்கின்றோம்
நண்பனவன் மறுமை வாழ்க்கை
நலம் பெறவே துதிக்கின்றோம்....!!!
( நண்பனின் சுவன வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக... ஆமீன் ஆமீன் )
- sironmany -
F M Rozaan

Comments
Post a Comment